2

இந்த ஐந்து அறநெறிகளும் உள்ளத்தில் பதிந்து செயல் வடிவம் பெறும் பொழுது சிறந்த வழிமுறைகள் தோன்றும், அறநெறிகள் நன்மை விளைவிக்கும் செயல்களாக உருமாற்றம் செய்யும். இம்முழு பிரபஞ்சமும் இயற்கை விதிகளை மீறாமல் செயல்படுகின்றது. அது போல சிறந்த வாழ்க்கை சிறந்த வழிமுறைகளை மீறாமல் இருக்கும். அவை இந்த முழு பிரபஞ்சமும் ஒரு ஒற்றை இயந்திரம் /ஒற்றை வடிவம் என்பதைப்போல எங்கு கவனித்தாலும் அதன் பாகங்கள் சீராக ஒத்திசைவாக செயல்படுகின்றன. இந்த சீரான ஒத்திசைவான தன்மை இல்லை என்றால் அதை பிரபஞ்சம் என்கிற பெயரில் அழைக்க முடியாது அதற்கு வேறு பெயரை இட வேண்டும். அது போலவே மனித வாழ்க்கையிலும் ஒரு உண்மையான வாழ்க்கைக்கும் பொய்யான வாழ்க்கைக்கும் ஒரு குறிக்கோளுடைய வலிமையான வாழ்க்கைக்கும் குறிக்கோளற்ற பலவீனமான வாழ்க்கைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு சிறந்த வழிமுறைகளே ஆகும்.

பொய்யான வாழ்க்கை என்பது முன்பின் தொடர்பில்லாத அலங்கோலமான எண்ணங்களை, உணர்ச்சிகளை, செயல்களை கொண்டிருப்பதாகும். உண்மையான வாழ்க்கை என்பது வாழ்க்கையின் அனைத்து பாகங்களையும் ஒன்றி இசைந்து செல்வதாகும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்பது பழுதுபட்ட ஓடாத இயந்திரத்திற்கும் நல்ல முறையில் ஓடுகின்ற இயந்திரத்திற்கும் உள்ள வேறுபாடு போன்றதே ஆகும். நல்ல முறையில் ஓடுகின்ற இயந்திரம் என்பது பயன் தருகின்றது என்பது மட்டும் அல்ல அது கண்களை கவர்வதாகவும், வியந்து இரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் அதன் பாகங்கள் பழுதடையும் பொழுது, மீண்டும் பழுது பார்த்து சரி செய்ய தகுதியை இழக்கும்போது, அது அதன் பயனையளிக்க முடியாதபேது அது குப்பையில் தூக்கி வீசப்படுகின்றது. அது போலவே வாழ்வின் எல்லா பாகங்களும் ஒன்றிணைந்து செயல்படும் பொழுது பயனும் வலிமையும் தருவது மட்டுமின்றி ஈடு இணையற்ற அழகுடன் விளங்குகிறது. ஆனால் குழப்பமான வாழ்வோ எந்த பயனுமின்றி பரிதாபப்படகூடிய துயரத்துடன் காட்சி அளிக்கிறது.

வாழ்வு சிறக்க வேண்டுமானால் சிறந்த வழிமுறைகளை இறுகப் பற்றி தொடர வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு மெல்லிய விஷயங்களையும் கூட அவை ஊடுருவிய வண்ணம் இருக்க வேண்டும். பூமி எவ்வாறு இயற்கை விதிகளுக்கு உட்பட்டு சுழல்கின்றதோ வாழ்வும் அவ்வாறு சிறந்த வழிமுறைகளுக்குள் உட்பட்டு நடைபெற வேண்டும். ஒரு புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் புத்திசாலி சிறிய விஷயங்களின் முக்கியத்தை உணர்ந்து கவனத்தில் கொள்வான். முட்டாளோ சிறிய விஷயங்களின் முக்கியத்தை உணராமல் கவனத்தில் கொள்ளமல் அக்கறையின்றி வாழ்வான். பொருள்கள் அவற்றுக்குரிய இடத்தில் இருக்க வேண்டுடம். பராமரிக்கப்பட வேண்டும். கடமைகளை சிறியதிலிருந்து மிக முக்கியமானதுவரை காலம் கடத்தாமல் உரிய நேரத்திற்குள் உரிய இடத்தில் செய்து முடிக்கப்பட வேண்டும். சிறந்த வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியின்மையின் மறுபெயர் தான் குழப்பம்.

ஒரு சிறந்த நிர்வாகி ஒரு ஒழுங்குமுறையின் வழியாகவே வெற்றியை அடையமுடியும் என்பதை உணர்ந்திருப்பான். எங்கே ஒழுங்கு முறை இல்லையோ அங்கே தோல்வி குடி கொண்டு விடும் என்பதையும் உணர்ந்திருப்பான்.

ஒரு விவேகமான மனிதன் ஒழுங்கு முறையுடன் கூடிய வாழ்வே மகிழ்ச்சிக்கு வழி. ஒழுங்கற்ற வாழ்வு துக்கத்திற்கே வழி என்பதை உணர்ந்திருப்பான். முட்டாள் என்பவன் யார்? கவனமின்றி சிந்திப்பவன், கட்டுப்பாடின்றி வாழ்பவன், அக்கறையின்றி செயல்படுபவன், புத்திசாலி என்பவன் யார்? கவனமாக சிந்திப்பவன். நிதானமாக செயல்படுபவன் உறுதியாக வாழ்பவன்.

உண்மையான சிறந்த வழிமுறைகள் என்பது வாழ்வுக்கு தேவையான புற பொருட்களை, கருவிகளை, உபகரணங்களை புற வாழ்வு உறவுகள் ஆகியவற்றை சீரிய முறையில் வைத்து பயன்படுத்திக் கொள்வததோடு முடிந்து விடுவதல்ல.அது அதன் ஆரம்பமே. இந்த சிறந்த வழிமுறைகள் நம்முடைய மனதின் அசைவின், செயல்பாட்டின் ஒவ்வொரு அசைவிலும் ஊடுருவியவாறு எண்ணங்களை சிந்தனைகளை ஒழுங்குப்படுத்துவதில் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் நற்செயல்களை தேர்ந்தெடுப்பதில் சொற்களின் வலிமை உணர்ந்து அளவறிந்து பயன்படுத்துவதில் (ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின் கண் சோர்வு—–642) என எல்லாவற்றிலும் பின்பற்றுவதாகும்.

சிறந்த வழிமுறைகளை பின்பற்றி வெற்றிகரமான இனிய வாழ்வை அடைய, ஒருவன் அன்றாட வாழ்வின் சிறு சிறு நடவடிக்கைகளை பழக்கங்களை மறந்து அல்ல, அவற்றை மறக்காமல் சிறந்த வழிமுறைகளை அந்த சிறுசிறு நடவடிக்கைகளில் பழக்கங்களில் புகுத்தியவாறு செயல்படுத்துவதில் தொடங்குவதாகும். எனவே தினமும் எப்பொழுது தூக்கம் களைந்து விழித்து எழுகிறோம், எப்பொழுது தூங்கச் செல்கிறோம் எவ்வளவு நேரம் உறக்கம் கொள்கிறோம் என்பவை எல்லாம் முக்கியமானதாகும். தினந்தோறும் உணவு உட்கொள்ளும் நேரங்கள், அவற்றிக்கு இடையே ஆன கால நேரம், உணவை போற்றி உட்கொள்ளும் விதம் என்பவை எல்லாம் உணவு செரிப்பதற்கு அல்லது செரிமானம் ஆகாமல் உளளிருப்பதில் பங்கு வகிக்கும். செரிமானம் ஆகிய உணவு இலகுவான தன்மையில் இருக்க உதவும், செரிமானம் ஆகாத உணவு எளிதில் எரிச்சல் படவைக்கும். காரணம் உணவு உட்கொள்ளும் விதமும் நேரமும் முறையும் உடல் அளவிலும் மனரீதியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தொழிலுக்கு நேரத்தை ஒதுக்குவது விளையாட்டிற்கு நேரத்தை ஒதுக்குவது இரண்டிற்கும் வேறுபாட்டை உணர்ந்து குழம்பி கொள்ளாமல் இருப்பது, தொழலில் திட்டமிட்டு செயல்படுவது, தனிமையை நாடி ஆழ்ந்த எண்ணங்களில் மூழ்கி எழுந்து புத்துணர்வுடன் செயல்படுவது, உணவை உண்பது, உணவை தவிர்ப்பது என இவை எல்லாமே அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவற்றை உணர்ந்து செயல்படுபவன் குறைந்த அளவு பாதிப்பில் மிகுந்த பயனை, மகிழ்ச்சியை, வசீகரத்தன்மையை பெறுகிறான்.

இவ்வாறு உணர்ந்து செயல்படுவது என்பது ஆரம்பமே. இவ்வழி முறைகள் எல்லாம் முழு வாழ்வின் தன்மையை அடி ஆழம் வரை தழுவ வேண்டும். இவ்வழிமுறைகளின் வழிகாட்டுதல் பேச்சிலும், செயலிலும், எண்ணங்களிலும் ஆசைகளிலும் எற்படும் பொழுது, அறியாமையிலிருந்து ஞானம் பிறக்கின்றது. பலவீனத்திலிருந்து வலிமை பிறக்கின்றது, இவ்வாறு மனிதன் மனதை பண்படுத்தி இனிதாக செயல்படும் பொழுது உயர்ந்த ஞானத்தை, ஆற்றலை, மகிழ்ச்சியை பெறுகிறான்.

எனினும் இந்த இறுதி கட்டத்தை அடைய ஒருவன் ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு சிறு சிறு செயல்களையும் கூட கருத்தில் கொண்டு அவற்றை முறைப்படுத்தி செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு படியாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும். அந்த படிகளும் அவற்றை கடப்பதற்கு அவன்் மேற்கொண்ட முயற்சியை பாராட்டும் விதமாக மிகழ்ச்சியையும் சக்தியையும் பரிசளிக்கும்.

வழிமுறைகள் என்பது சுலபமாக திறமையாக ஆற்றலுடன் ஒன்றை முடிப்பதாகும். ஒழுக்கம் என்பது மனதிற்கு இடப்பட்ட ஒரு வழி முறையாகும். அந்த மன ஒழுக்கம் என்பது நிதானத்தை, ஆற்றலை மகிழ்ச்சியை வழங்கும். கடமையை சரியாக செய்வது வழிமுறையாகும். வாழ்வை சரியாக வாழ்வது வழிமுறையாகும். கடமையை ஆற்றும் தன்மையும் வாழ்வை வாழும் விதமும் வெவ்வேறானவையல்ல, அவை ஒரே வாழ்க்கையின் மன இயல்பின் இருவேறு கோனங்களே.

எனவே கடமையில் கவனம் பேச்சில் தெளிவு எண்ணத்தில் நேர்மை என்பதற்கும் கடமையில் கவனமின்மை, பேச்சில் குழப்பம் எண்ணங்களில் பொய்மை என்பதற்கும் உள்ள பேறுபாடே வெற்றிக்கும் தோல்விக்கும் இசைக்கும் இரைச்சலுக்கும் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்க்குமான வேறுபாடாகும்.

சிறந்த வழிமுறைகளை கடமையில் நடத்தையில் எண்ணங்களில் ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் முழு வாழ்விலும் கொள்வது என்பதே உடல் நலத்திற்கு மன அமைதிக்கு வாழ்வின் வெற்றிக்கு இடப்படும் உறுதியான பாதுகாப்பான அடித்தளமாகும்.