3

அறநெறிகளையும் வழிமுறைகளையும் தொடர்வது பொய் கலப்பில்லாத உண்மையான செயல்களும் நடத்தையும் ஆகும். அறநெறிகளின் சாரத்தை விளங்கி கொள்ள விரும்புபவன் சிறந்த வழிமுறைகளை செயல் படுத்த விரும்புபவன் தன் வாழ்வில் ஒழுக்கத்தை வித்தாகக் கொள்வான்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும். (138).

ஒருவனின் ஒழுக்கமான செயல்களும் பண்புகளும், நடத்தையும் தனித்தன்மை வாய்ந்தவை. அதி முக்கியமானவை. காரணம் அவை தம் இயல்பிற்கு ஏற்ப அவற்றை ஒத்த செயல்களும், பண்புகளும் நடத்தையும் பிறப்பதற்கு வழி வகைசெய்யும். ஒரு செயல் மற்றொரு செயலை உருவாக்கும் தன்மை கொண்டது என்ற செயலின் ஆற்றலையும் சக்தியையும் உணர்ந்தவனிடம் ஒரு புதிய பார்வையும் ஒரு தெளிவும் பிறக்கின்றது. அவன் இந்த நுண் உணர்வை பெற பெற அவன் முன்னேற்றப்பாதையில் மிக வேகமாக செல்கிறான், செல்ல வேண்டிய பாதையையும் தீர்மானித்து கொள்கிறான். அவன் நாளும் பொழுதும் வீண் பரபரப்பின்றி அமைதியாக செல்கின்றன. தன்னை சுற்றியுள்ள புறச்சூழ்நிலைகளாலும் செயல்களாளும் பாதிப்படையாமல் கலக்கமின்றி நேர்வழியில் செல்கிறான். இவ்வாறு இருப்பது என்பது எவர் எக்கேடு கெட்டாலும் கவலைப்படாமல் இருப்பதல்ல, எவருடைய கருத்துக்களாலும், அறியாமையாலும், கட்டுப்படாத உணர்ச்சிகளாலும் பாதிப்படையாமல் இருப்பதாகும்.

உண்மையை சத்தியத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் செயல்கள் எப்போதும் நன்மையையும் மகிழ்ச்சியையும் விளைவிப்பதாகவே இருக்கும். நற்செயல்கள் செய்வதில் ஆழ வேரூன்றியவன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவற்றை கருத்தில் கொள்ளாமல் செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டாலும் அவற்றை அவன் செவி மடுக்கமாட்டான்.

இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.————654

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை—————–669

போலியான செயல்களுக்கும் உண்மையான செயல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை எவர் அறிய முனைந்தாலும் அவற்றை எளிதில் அறிந்து கொள்ளலாம். அறிந்து கொண்டு போலியை தவிர்த்து உண்மையை கடைபிடிக்கலாம். பொருள்களை அதன் தன்மை, வடிவம், நிறம், என பலவாறாக பிரித்து வேண்டியதை தேர்ந்தெடுத்து தேவையற்றதை ஒதுக்கிவிடுவது போல் செயல்களையும் அந்த செயல் செய்வதன் நோக்கம், செயல்படுத்தப்படும் தன்மை, இயல்பு அவை விளைவிக்கக்கூடிய நன்மை, தீமை ஆகியவற்றை உணர்ந்து தீய செயல்களை விலக்கி நற்செயல்களை புரியலாம்.

தீயவற்றை விலக்குவது என்பது எப்போதும் நன்மையை ஏற்று கொள்வதற்கு முதல் படியாகும். வளர்ச்சிக்கு உரிய வழியாகும். ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தை தன் பாடத்தை தவறாக செய்து செய்து அது சுட்டிக்காட்டப்பட்டவுடன் அதை கைவிட்டு சரியாக செய்வது போல தவறு என்றால் என்ன அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது அறியாதவன் எந்த காரணத்தால் சரியானவற்றை பின்பற்றப் போகிறான். தீமையான அல்லது பொய்யான செயல்கள் சுயநலத்தின் ஊற்றிலேயே பிறக்கின்றன மற்றவர்களது நலத்தை கருத்தில் கொள்ளாமல் கட்டுப்படாத மனத்தின் பேராசையில் பிறக்கின்றன. அச்செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தால் தலைகுனிவு ஏற்படும் என்பதால் மறைக்க முயல்படும். நன்மையான அல்லது உண்மையான செயல்கள் பிறர் நலத்தை எண்ணியே பிறக்கின்றன. தெளிந்த காரணங்களோடு அநநெறிகளின் துனைக்கொண்ட இனிய எண்ணங்களோடு அவை புறப்படுகின்றன.அவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை அதை செயதவனுக்கு ஒரு போதும் தலைகுனிவை ஏற்படுத்துவது இல்லை.

நற்செயல்களை முனைபவன் சுயநலத்தின் வாயிலாக தோன்றுகின்ற ஆசைகளை எண்ணங்களை ஈடேற்றாமல் ஒதுக்கிவிடுவான். அவை பார்ப்பதற்கு சிறிய விஷயமாக இருந்தாலும் அவற்றின் இயல்பு சஞ்சலத்தையும், மனக்குழப்பத்தையும், துன்பத்தையும் துக்கத்தையும் தருவதே.

தன்நலத்தையும் பொய்மையையும் துறக்க துறக்க உண்மையின் சத்தியத்தின் பொது நலம் ஆகியவற்றின் அறிவை பெறுவான். கோபத்pல் பொறாமையில் வெறுப்பில் பேசுவதோ செயல்படுவதோ கூடாது என்று உணர்ந்து அவற்றை தவிர்ப்பான். அவைகளை அவன் மனதிலிருந்து நீக்கிய பிறகே செயல்்பட வேண்டும் என்பதை உணருவான். சூழ்ச்சி தந்திரம் ஏமாற்று சுயலாபத்தையோ சுயநன்மையையோ உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவது என இவைகளை கடிய விஷத்தை அருந்துவதை தவிர்ப்பது போல தவிர்ப்பான். காரணம் அவற்றை மேற்கொள்பவன், விரைவாகவோ அல்லது காலம் கடந்தோ என்றேனும் ஒரு நாள் அவை வெளிச்சத்திற்கு வந்து அவமானத்தை வழங்கியே தீரும். ஒருவன் ஒரு செயலை தீய எண்ணத்துடன் மூடி மறைத்து செய்ய தூண்டப்படுவானேயானால், அவ்வாறு அவன் செய்வதை எவர் ஏனும் பார்த்து விடுவார்களோ என அஞ்சினால் தன் மனசாட்சி படி நடந்து தன்னை தற்காத்து கொள்ள முடியாது என்று நினைத்தால் ஒரு சிறு நொடி தாமதமும் இன்றி அந்த செயல் ஒரு தவறான செயல் அதனை அறவே தவிர்க்க வேண்டும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னை சுடும்.———————–293

செய்யும் செயலில் நேர்மையும் மனதார ஈடுபடுதல் என்னும் இந்த கொள்கையை கடைபிடித்தால் அது அவனை நற்செயல்களை கவனமாக செய்வதற்கு மற்றவர்களது சூழ்ச்சி, ஏமாற்றுகளில் சிக்கிச்கொள்ளாமல் இருப்பதற்கு வழி செய்யும். உடன்படிக்கைகளில் கை எழுத்து இடுவதற்கு முன், ஒப்பந்தங்களை ஏற்று கொள்வதற்கு முன், பிறர் வேண்டுகோளுக்கிணங்கி உறுதி மொழியை வாக்குறுதியை வழங்குவதற்கு முன் பொதுவாக தன்னை பிறரோடு ஈடுபடுத்தி கொள்வதற்கு முன், அதிலும் குறிப்பாக அவர்கள் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தால், செய்ய வேண்டிய செயலின் முழு விவரங்களையும் அறிந்து, அதில் தன் பங்கினை ஆற்ற முடியும் என்று நம்பினால் மட்டுமே அவன் அதில் ஈடுபடுவான். நற்செயல் புரிபவனுக்கு கவனமில்லாமல் செயல்படுவது என்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

நல்ல நோக்கத்தோடு அனால் கவனமின்றி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செயல்கள் பல தீங்கான பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. நல்ல நோக்கங்கள் நரகத்திற்கு வழியை ஏற்படுத்துகின்றன என்று கூட சொல்லாம். எவனது செயல்களில் உண்மையும் நேர்மையும் இருக்கின்றதோ அவன் கவனமுடன் செயல்படுகிறான். எனவே ‘பாம்பை போல் விழிப்புடன் ஆனால் புறாக்களை போல ஆபத்து விளைவிக்காமல் இருங்கள்’ .

கவனமின்றி செயல்படுதல் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான செயல்களுக்கு மட்டும் அல்ல எல்லா வகையான செயல்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து கவனமுடன் செயல்படுவது ஒருவனுக்கு செயலின் முழு தன்மையையும் விளங்க வைக்கும். நற்செயல்கள் புரிவதற்கு சக்தி கடைக்கும். கவனமுடன் செயல்படுபவனை முட்டாள்தனம் நெருங்காது அவனை விவேகம் அரவனைத்து கொள்ளும்.

ஒரு உண்மையான செயலுக்கு ஒரு நல்ல நோக்கமோ ஒரு நல்ல உள்மனத்தூண்டுதலோ மட்டுமே போதுமானது ஆகாது. அது எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு மலர வேண்டும். தன் அளவில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவன் பிறருக்கு நன்மை செய்யும் ஆற்றலோடு இருக்க விரும்புபவன் எப்போதும் தன்னை உண்மையான செயல்களிலேயே ஈடுபத்தி கொள்ள வேண்டும். கவனமின்றி செயலில் ஈடுபட்டு விரும்பதகாத விளைவுகள் ஏற்பட்டவுடன் ‘நான் முடிந்தவரை நல்ல நோக்கத்துடனே செயல்பட்டேன்’ என்று விளக்கம் சொல்வது சாக்கு போக்கு கூறி தப்பித்து கொள்வதாகவே கருதப்படும். அவனுடைய அந்த கசப்பான அனுபவம் எதிர்காலத்தில் கவனமாக செயல்பட உதவ வேண்டும்.

ஒரு உண்மையான மனத்திலிருந்தே உண்மையாக செயல்கள் பிறக்கும். உண்மையான செயலுக்கும் போலியான செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர தொடங்கியவன் தன் மனதை சரிபடுத்துகிறான் நெறிபடுத்துகிறான் இவ்வாறு அது பண்பட்டு ஆற்றலோடு செயல்பட வழி வகை செய்கிறான். அகக்கண் கொண்டு வாழ்வில் சரியானவைகளை பிரித்து பார்க்கும் சக்தி , அவ்வாறு அகக்கண்ணின் துனையோடு உணர முடியும் என்கிற நம்பிக்கை, அறிவு ஆகியவற்றை ஒருவன் வலிமையான அடித்தளமாகக் கொண்டு தன் குண இயல்புகளையும் பண்புகளையும் தோல்வி பயம் அச்சம் போன்றவைகளால் அசைக்கமுடியாதவாறு உயர்த்தி கொள்ளலாம்.