4 4.வாய்மை

உண்மையை செயல் படுத்தினால் மட்டுமே அறிய முடியும். உள்ளத் தூய்மை உடையவர்களுக்கே உண்மை வெளிப்படும்.வாய்மை என்பது உள்ளத்தூய்மைக்கு முதல் படியாகும். உண்மையின் பேரழகும் எளிமையும் என்னவென்றால் உண்மை அல்லாதவற்றை செய்யாமல் கைவிடுதலும் உண்மையை தழுவி செயல்படுவதுமே ஆகும். உண்மையாக பேசுவது என்பது உண்மையாக வாழ்வதற்கு வேண்டிய தொடக்கமாகும். பொய்மை, எல்லா வகையான ஏமாற்றும் சொற்கள், புறம் கூறுதல், வஞ்சகம் நிறைந்த சொற்கள் – போன்றவற்றை சிறிய அளவு ஆன்ம ஒளி மனதை வந்து அடையவேண்டும் என்றாலும் இவை எல்லாம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும. பொய் சொல்பவனும் புறங்கூறுபவனும் இருட்டில் முழ்கி கிடைக்கின்றான். நன்மைக்கும் தீமைக்கும் வேறுப்பாட்டை உணரமுடியாத அளவிற்கு கடுமையான இருட்டு அவனை சூழ்ந்துள்ளது. பொய்யும் புறஞ்சொல்லும் தேவை தான், அவற்றை தொடர்ந்து மேற்கொள்வதே தன்னையும் பிறரையும் காப்பதற்கான வழி என்று எண்ணுகிறான்.

உயர்ந்த அறநெறிகளை கற்க விரும்புபவன் இது போன்ற தன் சுய மாயையிலிருந்து தன்னை தற்காத்து கொள்ளட்டும். ஏமாற்று வார்த்தைகளை பேசுவது, பிறர் மீது வீண் பழி சுமத்துவது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது, பொறாமை காழ்ப்புணர்ச்சியை உள்ளே வைத்து பேசுவது ஆகியவற்றை ஒருவன் செய்கிறான் என்றால் உயர்ந்த அற நெறிகளை அவன் கற்க தொடங்கவில்லை என்று அர்த்தம். அவன் தத்துவங்களை, அற்புதங்களை, சூட்சமங்களை அதிசயங்களை கற்பவனாக இருக்கலாம், கண்ணுக்கு புலப்படாத உயிர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது, தூக்கத்திலேயே எவரும் அறியாமல் பயணம் செய்வது, ஆர்வத்தை தூண்டும் விஷயங்களை கற்பது, ஆன்மீக கொள்கை கோட்பாடுகளை புத்தக படிப்பைப் போல ஏட்டளவில் கற்கலாம்.ஆனால் அவன் புறங்கூறுபவனாகவோ ஏமாற்று சொற்கள் கூறுபவனாகவோ இருந்தால் உயாந்்த அறநெறிகள் அவனை வந்து அடையாது. உயர்ந்த அறநெறிகள் என்றால் நிமிர்ந்த நேர் கொண்ட வாழ்க்கை, நேர்மை, களங்கமின்மை, உள்ளத்தூய்மை, அன்பு, சாந்தம், நம்பிக்கை, பணிவு, பொறுமை, இரக்கம், தயவு, தன்னலம் துறப்பது, மகிழ்ச்சி, நல் எண்ணம், நேசம் போன்றவைகள் ஆகும். இவற்றை கற்க விரும்புபவன் தனதாக்கி கொள்ள விரும்புபவன் அவற்றை செயலாக்க வேண்டும், வேறு வழி கிடையாது.

பொய்யும் வஞ்சகமும் ஆன்மீக அறியாமையின் தாழ்ந்த நிலையாகும். அவற்றை மேற்கொள்பவனுக்கு ஆண்மீக ஒளி என்பது கிடைக்காது, அவை சுயநலமும் வெறுப்பும் ஈன்றெடுத்த குட்டிகளாகும்.

புறங்கூறுவது என்பது பொய்யுக்கு உறவு தான் என்றாலும், அது பொய்யை விட நுட்பமாக செயல்படுகிறது. வழக்கமாக ஒரு நியாயமான கோபத்துடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்கிறது. உண்மையை போன்ற தோற்றத்தை தருகின்றது. ஒரு பொய்யை துனிந்து கூற முற்படாதவர்கள் இந்த புறஞ்சொற்களை உண்மை என்று நம்பி திரும்ப செல்கிறார்கள். புறங்கூறுவதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.முதலாவது ஒவ்வொருவருக்கும் மீண்டும் மீண்டும் உரைப்பதாகும், மற்றொன்று காது கொடுத்து கேட்டு செயல்படுவதாகும். செவி மடுத்து கேட்பவன் இல்லை என்றால் புறங்கூறுபவன் சக்தியை இழந்துவிடுகிறான். தீய வார்த்தைகள் தீயதை கேட்கும் செவிகளுக்குள் நுழையாமல் வெற்றிபெற முடியாது. எனவே புறங்கூறுபவனுக்கு செவி சாய்ப்பவன், அதனை நம்புபவன் எவருக்கு எதிராக புறங்கூற படுகிறதோ எவருடைய மதிப்பும் மரியாதையும் துடைத்து எறியபடுகிறதோ அவருக்கு எதிரானவன் ஆக தன்னை தயார்படுத்தி கொள்கிறான். அவனது நிலை என்பது புறங்கூறுபவனது நிலை, அவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பரப்புகின்றவனது நிலை போன்றதே. புறங்கூறுபவன் முன் இருந்து செயல்படுபவன். அதைக் கேட்பவன் பின் இருந்த செயல்படுபவன். இருவரும் இந்த தீங்கில் சமபங்கு பெறுகிறார்கள்.

புறங்கூறல் என்பது பொதுவாக காணப்படும் குற்றமாகும், ஆனால் அது ஒரு கொடிய குற்றமாகும். அது அறியாமையில் பிறந்து கண் மூடி இருட்டில் நடக்கின்றது. அது பொதுவாக தவறாக புரிந்து கொள்வதிலிருந்து தொடங்குகிறது.ஒருவன் தாழ்வாக நடத்தப்பட்டுள்ளதாக உணர்கிறான், கோபமும் வெறுப்பும் கொண்டு தன் நண்பர்களிடம் ஆறாத துயராகக் கொட்டித் தீர்க்கிறான். காயம்பட்டதாக கருதுகின்ற காரணத்தால் தனக்கு இழைக்கப்பட்டதாக கருதும் அநீதி செயலை மிகைப்படுத்தி கூறுகிறான். அதைக் கேட்பவனும் மற்றவனது நிலைமையை புரிந்து கொள்ள சந்தர்பத்தை வழங்காமல் அந்த கோபமான வார்த்தைகளை முழுதாக ஏற்று அந்த செய்தியை பலருக்கும் பரப்புகிறான். அவ்வாறு, செய்யும் போது அந்த செய்தி தன்னாலேயே கண், காது மூக்கை என பெற்று கொள்ளும் .ஒரு பொய்யான செய்தி வேகமாக பரவுகிறது.

புறங்கூறுவது என்பது ஒரு சிறிய விஷயமாக கருதப்படுவது தான் துன்பத்தையும் மனவுறுத்தலையும் ஏற்படுத்துவதற்கு காரணமாகும். ஒன்றை தவறு என்று தெரிந்தால் அதை செய்ய மறுப்பவர்கள் கூட இந்த வலையில் தங்களை அறியாமல் விழுந்து விடுகிறார்கள். அன்று வரை மதிப்பு கொண்டிருந்த ஒருவருக்கு எதிராக தங்களை மாற்றுவதற்கு பிறருக்கு அனுமுதி வழங்குகிறார்கள். அவதூறு பரப்புவதன் நோக்கம் இது தான். உண்மையை விரும்பும் , வாய்மையை பின்பற்றுபவனிடம் இந்த அவதூறு அதன் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அவதூறு செய்திகளை கேட்டு நம்புவதில் அதை பரப்புவதில் ஆர்வம் கொண்டவன், தன்னை பற்றிய ஒரு அவதூறு செய்தியை கேட்க நேர்ந்தால் மனம் கொதிப்படைவான். தூக்கத்தை இழந்து மன நிம்மதியை இழந்து தவிப்பான், தன் துன்பத்திற்கு தன்னைப்பற்றி அவதூறை பரப்பும் மற்றவன் தான் காரணம் என்று நினைக்கிறான். மற்றவர்களை பற்றிய அவJhறில் ஆர்வம் கொண்டு உடனே நம்பி அதை பரப்பும் தன்னுடைய மனம் தான் அந்த துன்பத்திற்கு காரணம் என்கிற உண்மையை அவன் அறியவில்லை. உள்ளத் தூய்மையும் வாய்மையும் நிறைந்த ஒருவன் அவதூறு வார்த்தைகளின் தோற்றத்தை கூட தன்னுள் அனுமதிக்காதவன் தன்னை பற்றிய அவதூறு செய்திகளினால் எந்த விதமான பாதிப்பிற்கோ மனகலக்கத்திற்கோ ஆளாக மாட்டான். அவன் ஒருமை நிலையை எவரும் கைவைத்து சிதறடிக்க முடியாது. உள்ளத்தில் கலக்கத்தை ஏற்படுத்த முடியாது, தன்னை பற்றிய அவதூறு செய்திகளை நம்பியவர்கள் மனதில் சில காலத்திற்கு மதிப்பை இழந்து உள்ளான் என்பது உண்மை தான் என்றாலும் பிறரது தீய செயல்கள் ஒருவனை கறைபடுத்த முடியாது, அவனது தீய செயல்களே அவனது களங்கத்திற்கு காரணம். தவறாக எடுத்துரைக்கப்படுவது தவறாக புரிந்து கொள்ளப்படுவது போன்றவற்றால் உள்ள தூய்மை உடையவன் மனச்சஞ்சலத்திற்கோ பழிவாங்கும் உணர்ச்சிக்கோ ஆளாக மாட்டான். அவன் தூக்கத்தை கெடுக்க முடியாது. மன நிம்மதியை பறிக்க முடியாது.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை – 295

வாய்மை என்பது உள்ளத்தூய்மை, நிம்மதியான, முறையான வாழ்வுக்கு தொடக்கமாகும். வாழ்வில் களங்கமின்றி வாழ விரும்புபவன், உலகின் வேதனைகளை துன்பங்களை குறைக்க விரும்புபவன் பொய்யையும் புறங்கூறுவதையும் எண்ணத்தாலும் வார்த்தையாலும் அறவே கைவிடட்டும் .பாதி உண்மை என்பது, பொய் புறங்கூறுதலையும் விட மிக ஆபத்தானது. அவன் மிக எச்சரிக்கையாய் இருக்கட்டும். அவதூறு செய்திகளை கேட்பதிலிருந்து விலகி அதில் பங்கு பெறாமல் இருக்கட்டும். அவதூறு பரப்புவனிடமும் அவன் இரக்கம் கொள்ளட்டும் காரணம் தன்னுடைய நிம்மதியை பறிக்க போகிற துன்ப குழியில் தள்ளப்போகிற ஒரு சங்கிலியை பிடித்து கொண்டுள்ளான். பொய் கூறுபவனுக்கு உண்மையின் இன்பம் புரியது, புறங்கூறுபவனுக்கு நிம்மதியின் வாசல் திறக்காது.

ஒருவன் கூறும் வார்த்தைகளால் அவனது ஆன்மீக நிலை அறிவிக்கப்படுகிறது. அவனுடைய உண்மையான வார்த்தைகளாலே அவன் எடைப் போடப்படுகிறான். கிறிஸ்துவின் வார்த்தை ‘உங்கள் வார்த்தைகளால் நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளால் கண்டனம் செய்யப்படுகிறீர்கள்’.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *