5

நடு நிலைமையோடு இருப்பது மன நிம்மதியோடு இருப்பதாகும். நடு நிலைமை தவறுபவன் மன நிம்மதியை தவற விடுவான்.

விவேகமும் ஞானமும் நிறைந்தவன் சமநிலையில் வாழ்கிறான். மனதிற்குள் ஒரு அபிப்ராயத்தை காழ்புணர்ச்சியை பதிவு செய்து வைத்து கொள்ளாமல் நிதானமான மனத்தோடு எல்லாவற்றையும் சந்திக்கின்றான். உணர்ச்சி வேகத்தை விலக்கி ஒரு தலை சார்பாக வாழாமல் தன் மன நிம்மதியை இழக்காமல் உலகோடு அமைதியாக வாழ்கிறான். எவர் பக்கமும் சாயாமல் தன்னையும் தற்காத்து கொள்ளாமல் எல்லோருக்கும் தன் மனதில் இரக்கத்தை வழங்குகிறான்.

ஒரு தலைபட்சமாக வாழ்பவன் தன்னுடைய கருத்து தான் சரி என்று உறுதியாக இருக்கிறான். தன் கருத்திற்கு முரண்படும் கருத்து தவறான கருத்து அந்த கருத்தில் எந்தவித நியாயமோ நன்மையோ இருப்பதாக அவனால் நினைக்க முடியாது. எப்பொழுதும் தற்காத்து கொள்ளுதல் எதிர்த்தாக்குதல் என்ற வண்ணம் வாழ்கிறான். அமைதி, நடுநிலைமை போன்றவற்றின் அறிவை அவன் பெறவில்லை.

நடுவு நிலைமை கொண்டவன் தன் எண்ண ஓட்டங்களை உற்று கவனித்து வாழ்கிறான். வெறியோ காழ்ப்புணர்ச்சியோ அவைகளின் சுவடை கண்டால் கூட அடுத்த கனமே அவற்றை துடைத்து எறிகிறான். இவ்வாறு செய்து பிறர் மிது தன் இரக்கத்தை வளர்த்து கொள்கிறான் அவர்களது சூழ்நிலையை, குறிப்பிட்ட மன நிலையை புரிந்து கொள்கிறான். அவர்களை கண்டிப்பதிலும் நிந்திப்பதிலும் உள்ள பயனற்ற தன்மையை விளங்கி கொள்கிறான். இவ்வாறு அவனது இதயத்தில் ஒரு பரந்த நல்லெண்ணம் உருவாகின்றனது. அது ஒரு எல்லைக்கு உட்பட்டது அல்ல, துன்பத்தில் உழலும் எல்லா உயிர்களுக்கும் அங்கே இடமிருக்கும்.

ஒருவன் வெறியோ காழ்புணர்ச்சியோ கொள்ளும்போது ஆன்மீக பார்வையை இழக்கின்றான். அவன் கண்களுக்கு அவனிடத்தில் எந்த குறையையும் காணமுடியாது. மற்றவர்கள் மீது குறையை தவிர வேறு எதையும் காண முடியாது. தன்னுள் குழப்பம் கொண்டு மற்றவனை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அவர்களை கண்டிப்பதே சரி என்று எண்ணுகிறான். இவ்வாறு மாற்று கருத்து உடையவர்கள் மேல் அவனது இதயத்தில் ஒரு இருண்ட எண்ணம் வளர்கிறது.

பதிலுக்கு அவர்களும் அவனை கண்டிக்கிறார்கள், மற்றவர்களிடமிருந்து பிரிந்து தானே உருவாக்கிய ஒரு குறுகிய கூட்டுக்குள் தன்னை அடைத்து கொள்கிறான்.

நடு நிலைமை உடையவனது நாட்கள் இனிமையாக, நிம்மதியாக கழிகின்றன. பல வித நன்மையும் வளமும் வளர்கின்றன. ஆன்ம ஞானம் வழிகாட்டபகை, துக்கம், துன்பம் ஆகியவற்றிற்கு இட்டு செல்லும் வழியை விலக்கி அன்பு, நிம்மதி, மகிழ்ச்சிக்கு இட்டு செல்லும் வழியில் செல்கிறான். வாழ்வின் நிகழ்ச்சிகள் அவனை சஞ்சலப்படுத்துவது இல்லை, மனிதகுலம் பொதுவாக வருந்தும் விஷயங்களுக்கும் அவன் வருந்துவது இல்லை. அவை இயற்கையின் விதிகள் என்று ஏற்கிறான். வெற்றியால் துள்ளி குதிப்பதும் இல்லை தோல்வியால் துவண்டு விடுவதும் இல்லை. சுயநல ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் வருத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கின்றான். வீன் எதிர்ப்புகளை ஏற்படுத்திகொள்ளாமல் ஏமாற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கிறான். வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் உரிய இடம் வழங்குகிறான்.

போற்றுதலுக்குரிய தெய்வீகமான இந்த நடுவு நிலைமை எவ்வாறு அடையப்படுகிறது? தன் தாழ்வு நிலைகளை கடந்து வருவதில், தன் உள்ளத்தை தூய்மை படுத்தி கொள்வதில் .உள்ளத்தை தூய்மை படுத்தும் போது சீர்தூக்கி பார்க்கும் தன்மை ஏற்படுகிறது.

சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி 118.

இந்த சீர்தூக்கி பார்க்கும் தன்மை நடுவுநிலைமையை ஏற்படுத்துகிறது. நடுவு நிலைமை நிம்மதியை வழங்குகிறது. உள்ளத்தில் களங்கம் கொண்டவன் கலக்கமுற்றவன் உணர்ச்சி அலையில் கொந்தளிக்கிறான். உள்ளத்தில் களங்கமற்றவன் அமைதியான துறைமுகத்தில் இளைபாறுகிறான். முட்டாள் தனக்கு ஒரு கருத்து இருக்கிறது என்கிறான். புத்திசாலி தன் வேலையை பார்த்தவாறு செல்கிறான்.