6 6. நல் விளைவுகள்

வாழ்வின் பெரும்பாலான விஷயங்களை நாம் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை- தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் அவை நம்மை வந்து அடைவதற்கு நம்முள் எந்த காரணமும் இல்லை- அவை தம்பாட்டிற்்கு வந்துள்ளன, என்று கொள்கின்றனர் .சிலரை அதிர்ஷ்டக்காரன் என்றும் வேறு சிலரை துரதரிஷ்டகாரன் என்றும் அழைக்கின்றனர். பெற்றுக் கொள்வதற்கு உரிமையும் தகுதியும் இல்லாமல் ஒன்றை பெற்று கொண்டுள்ளதாக கருதப்படுகின்றனர். வாழ்வை ஆழமாக ஆராய்ந்து நோக்கினால் காரணமின்றி எதுவும் நடைபெறுவதில்லை என்று விளங்கி கொள்ளலாம். எங்கே ஒரு வினை ஏற்படுகிறதோ அங்கே ஒரு விளைவு ஏற்படும். ஒரு காரணம் இருந்தால் அதற்கேற்ற காரியம் நடைபெறும். இது இவ்வாறு இருக்க, நம்மை பாதிக்கும் ஒவ்வொன்றுக்கும் நம்முள் தகுந்த காரணம் இருக்க வேண்டும். ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் தற்செயலாக நடக்கும் செயல்களுக்கு கூட நம் எண்ணங்களும் செயல்களும் காரணம் ஆகும். மேலோட்டமாக பார்த்தால் இது ஏற்று கொள்ளும்படியோ புரிந்தகொள்ளும்படியோ இல்லை. சடப்பொருள்களின் மேல் செயல்படும் அடிப்படை விதிகளும் இயற்பியல் விதிகளும் கூடத்தான் மேலோட்டமாக பார்த்தால் புரிந்து கொள்ளும்படி இல்லை.

ஒரு அணுவிற்கும் மற்றொரு அணுவிற்கும் உள்ள தொடர்பை உறுதி செய்ய முறையான ஆராய்ச்சியும் சோதனைகளும் தேவைப்படுகின்றன. அது போலவே நடைபெறும் செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையில் ஒரு தவிர்க்க முடியாத தொடர்பை உணர்ந்து கொள்வது ஆகும். இந்த தொடர்பை குறித்த ஞானத்தை பெற்றவன் நற்செயல்களையே புரிகிறான்.

எதை விதைத்தோமா அதையே அறுவடை செய்கிறோம். நம்மை வந்து அடைந்தவைகளை நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் நாம் நம்முள்ளே விதைத்த காரணங்களினால் அவை வந்து அடைந்துள்ளன. குடி போதையில் தள்ளாடுபவன் அந்த தள்ளாட்டத்தை தடுமாற்றத்தை தேர்ந்து எடுக்கவில்லை. அவன் குடித்த காரணத்தின் விளைவாக அவன் தள்ளாடுகிறான், தடுமாறுகிறான். இந்த விஷயத்தில் இந்த தொடர்பு தெளிவாக தெரிகின்றது. மற்ற விஷயங்களில் அந்த தொடர்பு தெளிவாகத் தெரிவது இல்லை. ஆனால் அந்த தொடர்பு உண்மை தான். நம்முடைய துக்கத்திற்கும், மகிழச்சிக்கும் காரணம் நம்முள்ளேயே இருக்கின்றன.

உள்மன எண்ணங்களை சீரமைத்து கொண்டால் வெளி உலக நிகழ்ச்சிகள் துன்பத்தை தர முடியாது.உள்ளத்தை தூய்மை ஆக வைத்து கொள்ள மற்றவை யாவும் நன்றாகவே தொடரும்.

உங்கள் உள்ளேயே உங்கள் விடியலை விடுதலையை தேட வேண்டும்.

ஒவ்வொருவரும் தன் சிறைச்சாலையை தானே அமைத்து கொள்கிறான்.

தன் மாளிகையையும் தானே அமைத்து கொள்கிறான்.

வாழும் உயிர்கள் அனைத்தும் அளவிட முடியாத சக்தியை பெற்றுள்ளன.

அவை செயல்பட மகிழ்ச்சியோ துக்கமோ ஏற்படுகின்றது.

நம் வாழ்வு நல்லதோ கெட்டதோ, அடிமைத் தனத்தில் சிக்கி உழல்கின்றதோ அல்லது சுதந்திர பறவையாய் சுற்றி திரிகின்றதோ அதற்கு காரணம் எண்ணங்களே. எண்ணங்களிலிருந்து செயல்கள் புறப்படுகின்றன. செயல்களிலிருந்து விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு திருடனைப் போல,நல்ல விளைவுகளை நாம் திருடி அனுபவிக்க முடியாது, ஆனால் அந்த விளைவை ஏற்படுத்தும் காரணங்களை செயல்களை நம்முள் தொடங்கலாம்.

பணம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும், தெளிவான அறிவு வேண்டும் என்று பெரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெறமுடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் இவற்றுக்காக முயற்சி செய்யாதவர்களை அவை தேடி வருவதையும் காண்கிறார்கள். இதற்கு காரணம் தங்கள் ஆசைகளும் முயற்சிகளும் நிறைவேற முடியாத அளவிற்கு பல தடைகளை விதைத்துள்ளார்கள்.

எண்ணங்களும் செயல்களும், காரணங்களும் (அல்லது காரணமின்மையும்) விளைவுகளும் வாழ்வில் நெசவு ஆடையை போல நெய்யப்பட்டுள்ளன. அறநெறிகளை, மனதில் பதித்து, சிறந்த வழிமுறைகளை பின்பற்றி நற்செயல்கள் புரிபவன் நல்ல விளைவுகளை எதிர்பார்த்து காத்திருக்க தேவையில்லை, அவை அவனைத் தேடி வரும். தான் செய்த செயலின் பலனை அவன் அறுவடை செய்வான்.

வினை விதை்தவன் வினை அனுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான், ஒன்றை விதைத்து மற்றொன்றை அறுவடை செய்ய முடியாது.

இது எளிய பழமொழி தான் என்றாலும் மக்கள் இதை தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள். தீர்க்கதரிசி ஒருவர் “இருட்டின் குழந்தைகள் வெளிச்சத்தின் குழந்தைகளை விட பகல் பொழுதில் நன்றாக செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளனர். விதைக்காமல், நடாமல் விடப்பட்ட இடத்திற்கு யார் அறுவடைக்கு வருவார்கள்? புதரை விதைத்து கோதுமையை அறுவடை செய்ய யார் எதிர்ப்பார்பார்கள், அது முடியாத போது, கண்ணீர் விட்டு குறைப்பட்டு கொள்வார்களா? ஆனால் மக்கள் இதைத்தான் தங்கள் எண்ணங்களாலும், செயல்களாலும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தீயதை விதைத்து நல்லதை எதிர்பார்க்கிறார்கள். அந்த கசப்பான அறுவடை காலம் வரும்போது நம்பிக்கை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு மற்றவர்களது செயல்களை குற்றம் சொல்கிறார்கள். தங்களது எண்ணங்களிலும் செயல்களிலும் அவற்றிற்கான காரணம் மறைந்து இருப்பதற்கு வாய்ப்பு இருக்குமோ என்று கூட ஆராய மறுக்கிறார்கள். வாழ்வின் அடிப்படை விதிகளை தேடிக் கொண்டிருக்கும் வெளிச்சத்தின் குழந்தைகள் – தங்களை பக்குவப்படுத்தி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு விதையும் அறுவடையும் வேறாகாது என்ற விதியை உணர்ந்து, தங்கள் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் என்னும் காரணங்களுக்கு ஏற்ப விளைவுகள் அமையும் என்று பயிற்சி செய்ய வேண்டும். தோட்டக்காரர்கள் அது ஏன் அவ்வாறு என்று கேள்வி கேட்பதில்லை அதன் உண்மையை உணர்ந்து நட்டு பயன் பெறுகிறார்கள்.

தங்கள் உள் உணர்வாய் அறிந்த ஞானத்தால் தோட்டக்காரர்கள் தங்கள் தோட்டங்களை பராமரிப்பது போல மக்கள் தங்கள் மனம் என்னும் தோட்டத்தை பராமரிக்கட்டும், அவர்கள் விதைக்கும் விதையை குறித்து எந்த விதமான சந்தேகமும் அவர்களுக்கு இருக்கக்கூடாது. பின்பு நம்பிக்கையுடன் செயல் ஆற்றினால் அவர்களது அறுவடை எல்லோருக்குமான மகிழ்ச்சியுடன் பூத்து குலுங்கும். பொருள் சார்ந்த உலகத்தில் செயல்படும் விதிகள் தான் எண்ணம் சார்ந்த உலகிலும் செயல்படுFpன்றன.

சிறந்த அறநெறிகள் என்னும் காரணத்தை பின்பற்றினால் தீய விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை, சிறந்த வழிமுறைகளை பின் பற்றினால் நம் வாழ்க்கை என்னும் ஆடையில் சிக்கல் ஏற்படுத்தும் எந்த நூலும் நுழைய முடியாது. உள்ள உறுதி என்னும் கட்டிடத்தில் எந்த உறுதியற்ற கல்லும் இடம் பிடித்து ஆபத்தை ஏற்படுத்த முடியாது, நற்செயல்களை செய்தால் நல் விளைவுகள் பின் தொடரும். எப்படி தினையை விதைத்து சோளத்தை அறுவடை செய்ய முடியாதோ அது போல நன்மையை விதைத்தால் தீமையை அறுவடை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமோ என்று அஞ்சத்தேவை இல்லை.

இந்த நெறிகளின் அடிப்படையில் வாழ்வை ஒருவன் அமைத்து கொண்டால் அவன் ஒரு உயர்ந்த உள்ளுணர்வையும் சமநிலையையும் அடைவான். நிரந்தரமான மகிழ்ச்சியில் வாழ்வான், அவனது முயற்சிகள் தகுந்த காலத்தில் கனிந்து பயனைத்தரும்.அவன் வாழ்வால் பல வித நன்மைகள் மலரும். அவன் கோடீஸ்வரனாக ஆகாமல் இருக்கலாம் – அவனுக்கு உண்மையில் அது போன்ற ஆசைகள் எதுவும் இருக்காது. வாழ்வில் நிம்மதி என்னும் பரிசை பெறுவான் .அவன் கட்டளை கேட்டு வெற்றி அவனைத் தேடி வர காத்திருக்கும்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

6. நல் விளைவுகள் by செ அருணாச்சலம் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *